தெற்கு கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் 6 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்றும் களுத்துறையிலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகில் 5 பேர் இருந்துள்ள நிலையில் படகானது வர்த்தக கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவர்களில் ஒருவர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய நால்வரும் காணாமல்போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா – கொடபிமவிலிருந்து 20 மைல்கள் தொலைவில் உள்ள கடலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
களுத்துறையிலிருந்து புறப்பட்ட மீன்பிடி படகில் இருவர் இருந்துள்ள நிலையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இருவரும் காணாமல்போயுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன மீனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.










