டிப்ளோமா (Diploma)இது ஒரு பட்டப்படிப்பை (Degree) விடக் குறைந்த மட்டத்திலான, குறுகிய கால கல்வித் தகைமையாகும்.குறிப்பிட்ட தொழில்சார் திறனை மேம்படுத்துவதற்காக இது வழங்கப்படுகிறது.
கால அளவு: பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை.
உதாரணம்: இலங்கையில் உள்ள கல்வியியல் கல்லூரிகள் (College of Education), செவிலியர் பயிற்சிப் பாடசாலைகள் (NTS) ஆகியவற்றில் வழங்கப்படுபவை.
இது ஒரு பட்டப்படிப்பிற்கான நுழைவாயிலாகவோ அல்லது தொழிலைப் பெற்றுக்கொள்வதற்கான வழியாகவோ அமையும்.
முதுகலை டிப்ளோமா (PgDip): பட்டப்படிப்பிற்குப் பிறகு பூர்த்தி செய்யப்படும் டிப்ளோமாக்கள் இவ்வாறு அழைக்கப்படும். ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இது ‘Graduate Diploma’ எனப்படும்.
முதற்பட்டம் (Bachelor’s Degree)பல்கலைக்கழகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்தில் ஒருவர் பெறும் அடிப்படைப் பட்டமாகும்.
கால அளவு: பொதுவாக 3-4 ஆண்டுகள். மருத்துவப் பட்டங்களுக்கு 5 ஆண்டுகள் வரை ஆகலாம்.
சிறப்புப் பட்டம் (Special Degree): சில 4 வருடப் படிப்புகள் ஒரு குறிப்பிட்ட பாடத்தை மையப்படுத்தி அமைவதால் ‘Special Degree’ என அழைக்கப்படும். (எ.கா: BSc Special in Chemistry).
உதாரணங்கள்:
BA – கலைமாணி பட்டம்
BSc – விஞ்ஞானமாணி பட்டம்
BBA – வணிக நிர்வாகமாணி பட்டம்
BEng – பொறியியல்மாணி பட்டம்
MBBS – மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைமாணி பட்டம்
முதுமாணிப் பட்டம் (Master’s Degree)
முதற்பட்டத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட பாடத்துறையில் ஆழமான அறிவைப் பெற இது பயிலப்படுகிறது.
கால அளவு: பொதுவாக 1–2 வருடங்கள்.
வகைகள்: Taught Master’s (போதனை வழி) மற்றும் Research Master’s (ஆய்வு வழி).
பெரும்பாலான முதுமாணிப் பட்டங்களுக்கு ஆய்வேடு (Thesis) சமர்ப்பித்தல் அவசியமாகும்.
உதாரணங்கள்:
MA – முதுகலைமாணி பட்டம்
MSc – முதுவிஞ்ஞானமாணி பட்டம்
MBA – வணிக நிர்வாக முதுமாணி பட்டம்
M.Phil – தத்துவ முதுமாணி (Master of Philosophy)
இது முழுமையாக ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு முதுமாணிப் பட்டமாகும்.
பொதுவாக PhD செய்வதற்கு முன்னைய ஒரு கட்டமாகக் கருதப்படுகிறது.
சுயாதீனமான ஓர் ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவுகளை அங்கீகரிக்கப்பட்ட முறையில் வெளியிட (Publish) வேண்டும்.
கலாநிதிப் பட்டம் (PhD – Doctor of Philosophy)
பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் மிக உயரிய கல்வித் தகைமைகளில் ஒன்று.புதிய அறிவை உருவாக்கும் வகையிலான புதிய ஆய்வுகளை மேற்கொள்வது கட்டாயமாகும்.ஆய்வு முடிவுகள் சர்வதேச ஆய்விதழ்களில் (Journals/Conferences) வெளியாக வேண்டும்.
கால அளவு: பொதுவாக 3–7 ஆண்டுகள்.
ஆய்வேடு (Thesis) மற்றும் வாய்மொழிப் பரீட்சை (Viva-voce) அடிப்படையில் பல்கலைக்கழக சபை இதனை வழங்கும்.
பிற வகைகள்: DBA (வணிக நிர்வாக கலாநிதி), D.Eng (பொறியியல் கலாநிதி) மற்றும் கல்வித் துறையினருக்கான EdD (Doctor of Education).
கௌரவ கலாநிதி (Honorary Doctorate): குறிப்பிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் வழங்கும் கௌரவமாகும்.
குறிப்பிடும் விதம்: ‘Dr’ மற்றும் ‘PhD’ ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில்லை.
D.Sc. – விஞ்ஞான கலாநிதி (Doctor of Science)
இது PhD-யை விடவும் உயர்வான, மிகவும் விசேடமான ஒரு பட்டமாகக் கருதப்படுகிறது.
நீண்டகாலமாகச் செய்யப்பட்ட மிகச்சிறந்த ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உலகளாவிய சில பல்கலைக்கழகங்களால் மட்டுமே வழங்கப்படுகிறது.
பேராசிரியர் பதவி (Professorship)
‘பேராசிரியர்’ என்பது ஒரு பதவியே தவிர பட்டம் அல்ல.
பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த கல்விசார் பதவியாகும். பொதுவாக கலாநிதிப் பட்டம் (PhD) பெற்றவர்களே இப்பதவிக்குத் தகுதியானவர்கள்.
பிரித்தானிய மற்றும் இலங்கை முறைமைகளில், பல்கலைக்கழகத்தினால் இப்பெயர் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட வேண்டும். பல்கலைப்பழகப் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது அல்லது விலகும்போது, அவர் மீண்டும் ‘கலாநிதி’ (Dr) என்றே அழைக்கப்படுவார்.










