அறிவாலயம் அறக்கட்டளையினால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மட்டு.மேற்கு வலய மாணவர்கள் கௌரவிப்பு

ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில்  2024 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயப் பாடசாலைகளிலிருந்து தோற்றி,  மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 70மாணவர்களை அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தினால் இன்று வெள்ளிக்கிழமை கௌரவித்தனர்.

கொக்கட்டிச்சோலை,  பட்டிப்பளையில் அமைந்துள்ள அறிவாலயம் அறக்கட்டளை தலைமை காரியாலயத்தில் அறக்கட்டளையின் ஆலோசகர் சி. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,

அறிவாலயம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் அ.நல்லரெத்தினம், மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் வை. சி. சஜீவன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன், பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து 2024 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற 69 மாணவர்களும் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் நாவற்காடு கனிஸ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா என்ற மாணவியுமாக 70மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.

ஒரு மாணவருக்கு 5000ரூபாய் வீதம் வங்கிக் கணக்கில் வைப்பில் இட்டு வங்கிப்புத்தகம் மற்றும் மாமரக் கன்றுகளும் வழங்கப்பட்டன. அறிவாலயம் அறக்கட்டளையினால் அமரர் அலையப்போடி நினைவாக 15வருட பூர்த்தியை முன்னிட்டு அதன் ஸ்தாபகர் தொழிலதிபர் நல்லரத்தினம் இதனை வழங்கி வைத்தார்.

ஒவ்வொரு வருடமும் இச்செயற்பாட்டை அறிவாலயம் அறக்கட்டளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த செயற்பாட்டை முன்னெடுத்து வரும் தொழிலதிபர் நல்லரத்தினம் அவர்களை மண்முனை தென்மேற்கு கோட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர், அதிபர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். மேலும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டு செயற்பாட்டுக்காக சிறு உதவியும் குறித்த அறக்கட்டளையின் ஸ்தாபகரினால் வழங்கப்பட்டது.