பண்டைய நாகரிகத்தின் ரகசியங்கள் திரட்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகம்!

உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாகக் கருதப்படும் மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் (Grand Egyptian Museum – GEM), எகிப்தில் அதன் பண்டைய நாகரிகத்தைப் போற்றும் விதமாகத் திறக்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்டமான அருங்காட்சியகம், உலக அதிசயங்களில் ஒன்றான கிசா பிரமிட்டுகளுக்கு மிக அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

சுமார் 5,20,000 சதுர மீற்றர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், எகிப்தின் பல்லாயிரம் ஆண்டுகால செழுமையான வரலாற்றை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில் சுமார் 100,000 அரிய தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

குறிப்பாக, சுமார் 3,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இளம் மன்னரான துட்டன்காமூனின் (Tutankhamun) முழுமையான பொக்கிஷங்களும், அவரது தங்க முகமூடி உள்ளிட்ட பொருட்களும் முதல்முறையாக ஒரே இடத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத் திறப்பு விழா, எகிப்தின் கலாசார வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுவதுடன், நாட்டின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும், பண்டைய எகிப்தியர்களின் வரலாற்றை உலகறியச் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே மிகப் பெரியதென கருதப்படும் மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான நிதியை எகிப்து அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (JICA) பங்களிப்புகள் மூலம் திரட்டப்பட்டது.

கட்டுமானம் தீவிரமாக 2005 இல் தொடங்கப்பட்டு, அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பல்வேறு தாமதங்களைச் சந்தித்தது.

சுமார் 18 ஆண்டுகள் தீவிர கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு, இந்த அருங்காட்சியகம் 2023 ஆம் ஆண்டில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.