நிந்தவூர் பிரதேச சபையில் தவிசாளர் தெரிவு முடிவில் கைகலப்பும், ஆர்ப்பாட்டமும்

நிந்தவூர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நேற்று முந்தினம் வெள்ளிக்ழமை நடைபெற்றது.

ஏற்கனவே நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக 2025 ஜூலை 02  தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஆதம்பாவா அஸ்பர் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அமைவாக கட்சியின் உறுப்புரிமையை இழந்ததை தொடர்ந்து தவிசாளர் பதவியை இழந்தார்.

இந்நிலையில் புதிய தவிசாளர் தெரிவு கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற போதிலும் 13 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்திருந்த காரணத்தால் கோரம் இன்மையால் தவிசாளர் தெரிவு ஒத்தி வைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் புதிய தவிசாளர் தெரிவுக்கான கூட்டம் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. அதில் 6 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தால் கோரமின்மை காரணமாக தவிசாளர் தெரிவு இரண்டாவது தடவையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தவிசாளர் தெரிவினை நடத்துவதற்கான சபை அமர்வுக்கான கோரம் 50 வீதம் என்பதால், 07 உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதனால் 50 வீத கோரமின்றி புதிய தவிசாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை சபை அமர்வு இருந்தமையால் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ எல் எம் அஸ்மி தவிசாளர் தெரிவு தொடர்பில் தான் பத்திரிகை மூலம் அறிவிக்க அதற்கான பணிகளை முன்னெடுப்பதாக தெரிவித்து அமர்வை முடிவுக்கு கொண்டுவந்தார்.

நிந்தவூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பனவும் தமது உறுப்பினர்களை கொண்டுள்ளது. அமர்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 04 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி இரு உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உப தவிசாளரும் சமூகம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமர்வில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்ட குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி பிரமுகர்கள், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் அடங்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நிந்தவூர் பிரதேச சபை முன்றலில் சிலர் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு எதிராக சுலோகங்களை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே பிரதேச சபை செயலாளருக்கும் மற்றொருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறி சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. அதனையடுத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிந்தவூர் பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.