
இலங்கைக்கு கடத்துவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட நுளம்பு விரட்டும் ஊதுபத்தி பக்கற்றுகள் பறிமுதல்
தனுஷ்கோடி – சேரான் கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 720 நுளம்புகளை விரட்டும் ஊதுபத்தி பக்கற்றுகள் க்யூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி-சேரன்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸ் ஆய்வாளர் ஜானகி தலைமையில் கியூ பிரிவு பொலிஸார் சேரான் கோட்டை கடற்கரை பகுதியை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கண்காணித்தனர்.
அப்போது கோவை மாவட்டம் பதிவெண் கொண்ட வாகனத்தில் 12 அட்டைப் பெட்டிகளில் இருந்த 720 நுளம்புகளை விரட்டும் ஊதுபத்தி பெட்டிகளுடன் வாகனத்தின் சாரதி உட்பட இருவர் இருந்தனர்.
அவர்கள் கியூ பிரிவு பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றதால் பொலிஸார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணை செய்ததில் இலங்கைக்கு படகு மூலம் சட்டவிரோதமாக கடத்துவதற்காக 12 அட்டைப்பெட்டிகளில் நுளம்புகளை விரட்டும் ஊது பத்திகளை கொண்டு வந்து கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்து அரிச்சல் முனை அருகே கடலில் நிறுத்தி வைத்துள்ள பதிவு எண் இல்லாத படகு சேரான் கோட்டை கடற்கரை கொண்டு வந்து ஊது பத்திகளை இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
12 அட்டைப் பெட்டிகளில் இருந்த நுளம்புகளை விரட்டும் ஊதுபத்திகள்இ வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறையினரிடம் கியூ பிரிவு பொலிஸார் ஒப்படைத்தனர்.
