வயநாடு நிலச்சரிவு: 4 நாட்களுக்கு பின் 4 பேர் உயிருடன் மீட்பு

இந்தியாவில் கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி, 4 நாட்களுக்கு பிறகு, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரல்மலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள படவேட்டிக்குன்னுவில் இந்திய ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது. சிதைவடைந்த ஒரு வீட்டிற்குள் இருந்து 2 ஆண்கள், 2 பெண்கள் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களை பாதுகாப்பாக மீட்ட இந்திய ராணுவத்தினர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் ஜானி என்றும், அவர் சொந்தமாக தோட்டம் வைத்து பராமரித்து வந்ததாகவும் மெப்பாடி பஞ்சாயத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அவரது குடும்பத்தை சேர்ந்த ஜோன்மோள், கிறிஸ்டி, எப்ரஹாம் உள்ளிட்டோரும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு பெண்ணிற்கு காலில் படுகாயம் ஏற்பட்டு இருப்பதாக இந்திய ராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். நிலச்சரிவின் போது அவர்கள் உயரமான இடத்திற்கு சென்றதால் உயிர் பிழைத்ததாக மீட்புப் படையினர் கூறியுள்ளனர்.

மேலும் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 4 ஆவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. இதில் சூரல்மலையில் இருந்து முண்டக்கை பகுதிக்கு இரும்புப் பாலம் அமைக்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 4 நாட்களுக்கு பிறகு, இரண்டு வயது குழந்தையும் தாயும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள சாலியாற்றில் இருந்து இதுவரை 172 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சூரல்மலையில் உற்பத்தியாகி, முண்டக்கை வழியாக, பொத்துக்கல்லை சென்றடையும் சாலியாற்றில், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கின் போது ஏராளமான பொதுமக்கள் அடித்து செல்லப்பட்டனர்.

சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை சாலியாறு செல்லும் வழிநெடுகிலும் சடலங்கள் ஆங்காங்க கரை ஒதுங்கின. இதுவரை 172 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மலப்புரத்தில் சாலியாற்றில் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்