
திருகோணமலை : 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிப்பு
-திருகோணமலை நிருபர்-
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் பெய்த காற்றுடன் கூடிய மழை காரணமாக குச்சவெளி பிரதேசத்தில் ஏழு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒரு கடையொன்றும் சேதமடைந்துள்ளதாக குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன் தெரிவித்தார்
இதேவேளை நெல் அறுவடை காலமாக இருப்பதால் நெற் கதிர்கள் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கடலை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் காற்றுடன் கூடிய மழை காரணமாக வெள்ள நீர் புகுந்துள்ளது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகம் உட்பட ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளில் அனர்த்தம் பதிவாகியுள்ளதாகவும்இ மாவட்டத்தில் 42 வீடுகளும், நான்கு கடைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக திரட்டப்பட்டு வருவதுடன்இ மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக அடுத்த வாரம் இதற்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் தெரிவித்தார்.

