
71 பயனாளிகளுக்கு மீன்பிடி வலைகள் கையளிப்பு
-யாழ் நிருபர்-
வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 71 பயனாளிகளுக்கு நேற்று திங்கட்கிழமை மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கப்பட்டன
2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் நிதியில் இருந்து உடுத்துறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 71 பயனாளிகளுக்கு எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
குறித்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக மீன்பிடி வலைகள் கொள்வனவு செய்யப்பட்டு பயனாளிகளிடம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது பயனாளிகளால் வலைகள் தரமற்றவை என கூறி நிராகரிக்கப்பட்டது.
பயனாளிகளின் கோரிக்கையை அடுத்து யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளாலும் பிரதேச செயலகத்தால் கொடுக்கப்பட்ட வலைகள் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
ஊடகங்களிலும் இதுதொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த நிலையில் தாம் கொடுத்த தரமற்ற வலைகளை மீளப்பெற்று தரம் கொண்ட 71 பயனாளிகளுக்குமான வலைகளை பிரதேச செயலகம் சில நாட்களுக்கு முன்பு கையளித்தது.
பிரதேச செயலகம் கையளித்த தரம் கொண்ட வலைகள் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில்வைத்து 71 பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் கலந்து கொண்டு குறித்த வலைகளை பயனாளிகளிடம் வழங்கி வைத்தார்.