600 வருட பழமைவாய்ந்த பாண்டிருப்பு தீப்பள்ளயம்
-கல்முனை நிருபர்-
மகாபாரத இதிகாசத்துடன் தொடர்புபட்ட கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சம் கடந்த 20 ஆம் திகதி பூர்வாங்க கிரியைகள், ஊர்க்காவல் பண்ணல், கடல் குளித்தல், கொடியேற்றம் ஆகியவற்றுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
மகாபாரத போரை நினைவு கூறும் முகமாக தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் முக்கிய நிகழ்வுகளாக எதிர்வரும் பன்னிரெண்டாம் நாள் ஒக்டோபர் முதலாம் திகதி காலியாணக்கால் வெட்டுதல், பதினாறாம் நாள் ஒக்டோபர் 05 ஆம் திகதி கிருஸ்ணர், பாண்டவர்கள், திரௌபதை தேவாதிகள் சகிதம் வனவாசம் செல்லுதல், பதினொழாம் நாள் 06 ஆம் திகதி அருச்சுனன் பாசுபதம் பெறுவதற்காக தவநிலை செல்லுதல், அரவாணைகளப்பலி கொடுத்தல், பதினெட்டாம் நாள் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தீப்பள்ளயத்தின் சிகரம் என போற்றப்படும் தீமிதிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது.
மறுநாள் 08 ஆம் திகதி சனிக்கிழமை பாற்பள்ளயம், தருமருக்கு முடிசூட்டுதல் தீக்குழிக்கு பால்வார்க்கும் நிகழ்வு இடம்பெற்று அன்று இரவு 7 மணிக்கு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் திரௌபதை அம்மன் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அம்மன் முத்துச் சப்புறத்தில் எழுந்தருளி ஊர்வலம் செல்லும் நிகழ்வுடன் உற்சவம் இனிதே நிறைவு பெறவுள்ளது.
கிழக்கில் மட்டக்களப்பு நகருக்கு தெற்கே 40 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள கல்முனை நகருக்கு வடக்கே 2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம் இலங்கையிலே முதன் முதலில் திரௌபதை அம்மனுக்கென ஆலயம் அமையப்பெற்றது பக்தி மணம் கமளும் பாண்டிருப்பிலேயாகும்.
- Advertisement -
இவ் ஆலயத்தின் வரலாறு மிகத் தொன்மையானதாகும். வட இந்தியாவில் இருந்து வைஷ்ணவ மதத்தை பரப்பும் நோக்கோடும், மகாபாரத இதிகாசத்தை மக்கள் மத்தியில் நடித்துக்காண்பிக்கும் நோக்கோடும் தாதன் என்னும் மாமுனியும், அவனது ஆட்களும் கடல்வழியே பிரயாணம் செய்து மட்டக்களப்பு பகுதியை வந்தடைந்தனர்.
பின்னர் அங்கிருந்து அந்நாளில் நாகர் முனை என அழைக்கப்பட்ட திருக்கோயிலை சென்றடைந்து அங்கேயே தங்கியிருந்து மகாபாரத இதிகாசக் கதையினை மக்கள் மத்தியில் போதித்து வந்தனர்.
வட இந்தியாவில் இருந்து தான் என்பவன் இங்கு வந்திருப்பதனை ஒற்றன் மூலம் அறிந்து கொண்ட அப்போது மட்டக்களப்பு பகுதிக்க சிற்றரனாக இருந்த மாருதசேனனுடைய புத்திரன் எதிர்மன்ன சிங்கன் (கி.பி.1539-கி.பி.1583) தாதனைக் கண்டு, அவனது வருகை, குலம், நோக்கம், கோத்திரம், நாடு என்பவற்றை விசாரித்திருந்தான்.
தாதனும் தான் வருகை தந்த நோக்கத்தை மன்னிடம் தெரிவித்து அதற்கேற்ற உகந்த இடம் ஒன்றை தேடி வழங்குமாறு மன்னிடம் கேட்டுக் கொண்டான்.
மன்னனும் தானின் விருப்பப்படியே கடல் வழியே பிரயாணம் மேற்கொண்டபோது அருகே கடலும், ஆலவிருட்சங்களும், கொக்கட்டிமரங்களும் மேற்கே வனப்பகுதியும் காணப்பட்ட பாண்டிருப்பைக் கண்டு அங்கேயே தாம் கையோடு கொண்டுவந்திருந்த திரௌபதை, விஸ்ணு, பாண்டவர்கள் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வணங்கி வந்தான். மன்னனும் தாதனின் வழிபாட்டு முறைக்கு பூரண ஆதரவை தெரிவித்தான்.
அக்காலத்தில் திரௌபதை அம்மன் ஆலயத்தின் மகிமையை கேள்வியுற்ற கண்டி மாநகரை ஆட்சிபுரிந்த அரசனான விமலதர்ம சூரியன் (கி.பி.1594 –கி.பி.1604)இல் இங்குவந்து அம்மனை தரிசித்துவிட்டு சென்றதாகவும், இவ்வாலயத்திற்காக தங்கம்இ வெள்ளி போன்ற ஆபரணங்களை பரிசாக அளித்துச் சென்றுள்ளான் என கல்வெட்டுக்களில் இருந்த அறியக் கிடைக்கின்றது.
பழமையம், புதுமையும், அற்புதமும் நிறைந்த பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த வருடம் நடைபெறவில்லை.
இம்முறை நாட்டின் நாலாபாகங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் பாண்டிருப்புக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனையிட்டு இறுதி மூன்று தினங்களும் விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆலத்தின் 18 நாள் உற்சவத்தின் போது தினமும் அதிகாலை 5 மணிக்கும், மாலை 5 மணிக்கும் விசேட பூசை, ஆதாரனைகள் நடைபெற்று வருகின்றது.
- Advertisement -