35 ஆண்டுகளின் பின்னர் யாழில் திறக்கப்பட்ட வீதி

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை – பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி (T சந்தி) வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதி மக்களின் பாவனைக்காக 35 ஆண்டுகளின் பின்னர் இன்று வியாழக்கிழமை அதிகாலை 6 மணிமுதல் இராணுவத்தினரால் கட்டுப்பாடுகளுடன் திறந்து விடப்பட்டுள்ளது.

இராணுவத்தால் மூடப்பட்டிருந்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பின் இன்று திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 1 ஆம் திகதி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தியூடாக அச்சுவேலி செல்லும் வீதி திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக வசாவிளான் சந்தியிலிருந்து – பலாலி T சந்திவரையான பாதை திறக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும், பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை குறித்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல் வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே செல்ல முடிவதுடன் சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்விதிமுறைகளை மீறுதல் சட்டவிரோதம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பொங்கி பாதை திறப்பை மக்கள் கொண்டாடியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க