300 பவுண் தங்க நகைகளைத் திருடிய சந்தேகநபர் ; நீண்டகால தேடுதலின் பின்னர் கைது!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 300 பவுண் தங்க நகைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து அதிகமான நகைகள், ஆவணங்கள், திருட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரண்டு வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்துச் சென்று, நகைகளைத் திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளன..
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த குறித்த நபர் திருடிய பணத்தில் கொழும்பில் சோகுசு வீடு வாங்கியுள்ளதாகவும் , இவரது மனைவி இவ்வாறான திருட்டு வேலைகளை செய்வதில் இவருக்கு துணையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த நபரின் மனைவி தலைமறைவாகியுள்ளதுடன், திருடப்பட்ட நகைகளை வாங்கிய கொழும்பை சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரிடமிருந்து பவுணில் 90 பவுண் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.