“27வருடங்கள் நீதியின் பயணம்” : நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஓய்வு பெறுகிறார்

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், 27 வருடங்களை நீதித்துறையில் பூர்த்தி செய்து ஓய்வு பெறுவதாக தெரியவருகின்றது.

27 வருடங்களை நீதித்துறையில் பூர்த்தி செய்த, “முதல் தமிழ் நீதிபதி” என்ற பெருமை, இளஞ்செழியன் அவர்களையே சாரும்.

நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன், எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அடிபணியாது, நீதியை நிலைநாட்டிய நீதவான் என்று, நாட்டு மக்கள் மனங்களில் ஒரு அழியாத இடத்தை பிடித்துள்ள ஒருவராவார்.

இலங்கை நீதிபதிகளின் வரலாற்றில், வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், நீதிபதியாக 27 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

1997 ஆம் ஆண்டு பெப்ரவரி 05 ஆம் திகதி, நீதிபதியாக வவுனியாவில் தனது முதல் நியமனத்தை பெற்றார்.

2000 தொடக்கம் 2008 வரையான ஒன்பது வருடங்கள் கடுமையான யுத்தம் நிலவிய காலப்பகுதியில், அவர் வவுனியாவில் நீதிபதியாக கடமையாற்றினார்.

2006 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி, வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில், இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது, இராணுவத்தினர் திருப்பித்தாக்கியதில் விவசாய கல்லூரி வளவில் கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த, ச.கிந்துஜன், சி.கோபிநாத், இரா.அச்சுதன், ஆர்.மொகமட், தி.சிந்துஜன் ஆகிய ஜந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.

குறித்த மாணவர்கள் கொலை வழக்கு, நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்பின் 2008 இல், மேல் நீதிமன்ற ஆணையாளராக, அவர் நியமிக்கப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு, திருகோணமலை கோயில் குருக்களின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியிருந்தார் நீதிபதி இளஞ்செழியன்

1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி, திருகோணமலை கோணேஸ்வரர் கோவிலின் பிரதம குருவாக இருந்த சிவகாட்சி குருக்கள் விசா கேஸ்வர ஐயர், தனது மனைவியாகிய அம்பிகா என்றழைக்கப்படும் சொக்கலிங்கம் சிவபால சுந்தரப்பிள்ளை குரேஷ்வரியை, கழுத்தில் நைலோன் கயிற்றினால் இறுக்கி கொலை செய்து, ஆலய வளாகத்தில் புதைத்த வழக்கில், குறித்த குருக்களுக்கு 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி, நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோயில் குருக்களின் சார்பில், மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்த கொலையை கோவில் குருக்கள் திட்டமிட்டுச் செய்தபோது, சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட, அவர்களது ஒரு வயது குழந்தை பார்த்துக்கொண்டிருக்க, குழந்தையின் கண்முன்பே தனது மனைவியை குழுக்கள் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்பின்னர், 2014 ஆம் ஆண்டு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்ற போது, 2015 ஆம் ஆண்டு தனது கணவரை கொலை செய்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு, நீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார், இந்த தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார்.

அப்போது இலங்கை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வித்தியா கொலை வழக்கில், மூவர் அடங்கிய தீர்ப்பாயத்தில், ஒரு நீதிபதியாக தனித் தீர்ப்பு எழுதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தார்

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட குறித்த வழக்கு விசாரணைகளை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்கொண்டிருந்த வேளையில், அவரது மெய்பாதுகாவலர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் சந்தியில் வைத்து, நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை குறி வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவரது மெய்ப்பாதுகாவலர் ஓருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், மற்றொரு பாதுகாவலர் காயமடைந்தார்.

அந்த சம்பவத்தில், மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா என்பவரே உயிரிழந்தார்.

2017 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை, பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளியாக இனங்காணப்பட்ட, நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்தார், நீதிபதி இளஞ்செழியன்

2018 இல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றார்

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்டவிரோதமாக கைது செய்து, அவரை சித்திரவதை செய்து, கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இராணுவ சிப்பாய் ஆகிய இருவருக்கும், அதே வருடம் ஓகஸ்ட் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

குறித்த வழக்கில் குற்றவாளிகளாக நிருபிக்கப்ப்பட்ட, 512 ஆம் படை பிரிவின் கட்டளை தளபதி மற்றும் திருநெல்வேலி இராணுவ அதிகாரி ஆகிய இருவருக்கும், ஜனாதிபதி விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில் கழுத்தில் சுருக்கிட்டு, உடலில் இருந்து உயிர் பிரியும் வரை துக்கிலிட்டு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு ஆணை பிறப்பித்தார்.

குறித்த மரண தண்டனை தீர்ப்பானது, வாசிக்கப்படும் போது, நீதிமன்றின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, தீர்ப்பு எழுதப்பட்ட பேனா முறித்து எறியப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் சில நிமிடம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கானது, 1998 ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி, யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த அன்ரன் குணசேகரம் என்ற இளைஞர், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் இரண்டு நாட்களில் சடலமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமாகும்

2022 இல் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அப்போது பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து, இரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி, விடுதலை செய்தார்

குறித்த வழக்கில் தயா மாஸ்டர் சார்பாக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி யாழ். சுண்டுக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை இலங்கை இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தனர் . கிருஷாந்தியைத் தேடிச்சென்று இராணுவத்தினரிடம் விசாரித்த, கிருஷாந்தியின் தாய் ராசம்மாள், சகோதரர் பிரணவன் மற்றும் பக்கத்து வீட்டுக்காரராகிய கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1998ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி கிருசாந்தி கொலை வழக்கில், சோமரத்தின ராஜபக்ச என்ற இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அதில் சோமரத்ன இராசபக்ச என்ற இராணுவ வீரர் அளித்த வாக்கு மூலத்தில்,

“செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி பிரணவன், தாயார் ராசம்மா குமாரசாமி, அயலவர் சிதம்பரநாதன் மட்டுமல்ல இன்னும் பலர் 300ல் இருந்து 400 வரையானவர்கள் புதைக்கப்பட்டுள்ளார்கள்” என தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த செம்மணி புதைகுழி வழக்கில், நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

1999 இல் மன்னாரில் காமாலிக்கா கொலை வழக்கு, மடு தேவாலய குண்டு வெடிப்பு வழக்கு, லயன் எயார் குண்டு வெடிப்பு வழக்கு ஆகியவை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கிய முக்கிய வழக்குகளாக சொல்லப்படுகின்றது.

இவ்வாறு இலங்கை வரலாற்றில் கறைபடித்த முக்கிய குற்றங்களில் நீதியான தீர்ப்புகளை வழங்கிய மதிப்புமிக்க ஒரு ன் நீதீபதியாக நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் காணப்படுகிறார்.

நீதியின் காவலன் என போற்றப்படும் நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தற்போது நீதித்துறையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM