பொது மக்களுக்கான விழிப்புணர்வு செய்தி – பீதி அடைய வேண்டாம் – அரசாங்க அதிபர்

இலங்கை இன்று புதன்கிழமை இந்திய பெருங்கடல் சர்வதேச சுனாமி உருவகப்படுத்தல் ஒத்திகை பயிற்சி திட்டத்தில் பங்கேற்கிறது.

இந்தப் பயிற்சி ஒத்திகையின் மூலம் இலங்கை சுனாமி போன்ற அர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தயார் நிலையில் பரிசோதிப்பதற்கான ஒரு ஏற்பாடாக அமைகின்றதால் இதன் போது மக்கள் பீதி அடையத் தேவையில்லை என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம அறிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நாட்டின் தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களில் தேசிய சுனாமி ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வானது இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்வானது தெரிவு செய்யப்பட்ட கரையோர மாவட்டங்களான காலி ,களுத்தறை,யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவித்தலில், பொதுமக்கள் எந்த வகையிலும் பீதியடையத் தேவையில்லை எனவும் இதுவொரு ஒத்திகை நிகழ்வு மாத்திரமே என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகையின் போது வெளியிடப்படும் தகவல்கள், அறிவித்தல்கள், மற்றும் எச்சரிக்கைகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அடிப்படையில் நடைபெறும் ஒத்திகைச் செயற்பாடுகளாக இருந்ததோடு இந்த ஒத்திகை நிகழ்வானது, உண்மையான சுனாமி எச்சரிக்கை நிலை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்புகள் மற்றும் பொது மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பரிசோதித்து, தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

சுனாமி ஒத்திகை நடைபெறும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கு ஏற்கனவே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் வீதிகளில் தேவையற்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.