பாண்டிருப்பில் பாண்டவர்கள் வனவாசம்

-கல்முனை நிருபர்-

கிழக்கில் 600 வருடங்கள் பழமைவாய்ந்த பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் 16 ஆம் நாள் திருவிழாவில் பாண்டவர்கள், திரௌபதை, ஸ்ரீ கிருஸ்ணர், தேவாதிகள் சகிதம் வனவாசம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள்புடை சூழ பாண்டவர்கள் வனவாசம், அஞ்ஞானவாசம் மேற்கொண்டனர்.

இதன்போது பக்தர்கள் காவடி, கற்பூரச்சட்டி, அங்கப்பிரதட்சணை ஆகிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினார்கள்.

மகா பாரதத்தில் பாண்டவர்கள் சூதாட்டத்தின் போது துரியோதனன், சகுனி ஆகியேரரின் சூழ்ச்சியினால் நாடு, நகர் இழந்து வனவாசம் செல்வதை குறிக்கும் முகமாக பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் இவ் வனவாசம் செல்லும் காட்சி 16 ஆம் நாள் திருவிழாவில் நடித்துக் காண்பிக்கப்படுகின்றது.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயமானது மகாபாரத இதிகாச கதையினை நினைவு கூறும் முகமாக 18 தினங்கள் உற்சவம் நடைபெற்றுவருவது வழக்கமாகும்.

கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி திருக்கதவு திறத்தல், பூர்வாங்க கிரியைகள், ஊர்க்காவல் பண்ணல், கொடியேற்றம் ஆகியவற்றுடன் உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இவ் ஆலய உற்சவத்தின் நாளைவெள்ளிக்கிழமை, 07 ஆம் திகதி மாலை 5 மணிக்கு தீப்பள்ளயத்தின் சிகரம் என மதிக்கப்படும் தீ மிதிப்பு வைபவம் நடைபெற்று மறுநாள் 08 ஆம் திகதி தருமருக்கு முடி சூட்டும் நிகழ்வு, தீக்குழிக்கு பால்வார்க்கும் சடங்கு, அம்மன் முத்துச்சப்புறத்தில் எழுந்தருளி ஊர்வலம் செல்லல் ஆகியவற்றுடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.

பாண்டிப்பில் பாண்டவர்கள் வனவாசம் பாண்டிப்பில் பாண்டவர்கள் வனவாசம்