ஈ, கொசு மூலமாக பரவும் உயிர்க்கொல்லி நோய்: மக்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவில் வட மாநிலங்களில் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் தற்போது வரை 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
9 மாதங்கள் முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் சண்டிபுரா வைரஸால் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் 8-10 மணி நேரத்தில் உயிரிழந்துவிடுவார்கள் என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். இந்த வைரஸ் கொசு, மணல் ஈ மற்றும் உண்ணி உள்ளிட்டவற்றால் பரவுகிறது. சாதாரண காய்ச்சல் போல இருப்பதால் மக்களால் இதை அடையாளம் காண முடிவதில்லை.
இந்நிலையில், குஜராத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு குழந்தை கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. குழந்தையின் ரத்த மாதிரியை மருத்துவர்கள் புனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர். ஆய்வின் முடிவில், குழந்தை சண்டிபுரா வைரஸ் தொற்றால்தான் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதே அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 14 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறன.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான தலைவலி, வலிப்பு, அடிக்கடி வாந்தி, குழப்பம், எரிச்சல் மற்றும் நினைவு தவறுதல் ஏற்படும். நோயின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது கோமா நிலைக்கு கூட தள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம் நோய் அறிகுறி தென்பட்ட உடன் மருத்துவமனையில் குழந்தையை அட்மிட் செய்ய வேண்டும். நீர் சத்து குறைவதால் அவர்களுக்கு அதற்கான சிகிச்சை வழங்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் 29 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 26 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் ராஜஸ்தானையும், ஒருவர் மத்தியப் பிரதேசத்தையும் சேர்ந்தவராவார். 15 இறப்புகளில், குஜராத்தை சேர்ந்தவர்கள் 13 பேரும், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் ஒருவர் எனவும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
