
இந்திய கடற்றொழிலாளர்கள் 35 பேர் கைது : கவலை வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜய்
இந்திய கடற்றொழிலாளர்கள் 35 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமைக்கு தவெக தலைவர் விஜய் கவலை வெளியிட்டுள்ளார்.
வட பகுதி கடலில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோத பயணம் என்பன தொடர்பாக 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவெக தலைவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளமையும் மன வேதனையை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர்களது படகுகளையும் மீட்டுத்தருவதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
