வெள்ளத்தில் மூழ்கும் மட்டக்களப்பு

தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ள காற்று அம்பாறைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவில் வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி தனது நகர்வை ஆரம்பித்திருக்கிறது.

இதே வேகத்தில் நகரும்போது இன்றிரவுக்குள் திருகோணமலைக்கு கிழக்கே 150கிமீ தொலைவு என்ற அளவில் நெருங்கிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கிழக்கில் தற்போது பரவலாக கனமழை பெய்யத்தொடங்கியுள்ள நிலையில்இ வடக்கிலும் அடுத்துவரும் 36 மணிநேரங்களில் எந்நேரமும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்வுகூறப்படுகிறது.

மேலும் தற்போது ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் வலையறவு பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக வீதிகளில் நீர் தேங்கி நிற்பதுடன் வீடுகளிளும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

மேலும் வடிகாண்களில் புற்செடிகள் வளர்ந்து இருப்பதால் நீர் ஓட முடியாமல் மட்டக்களப்பு நகர் பகுதியான அரசடி ஜீ.வி. வைத்தியசாலைக்கு அருகாமையில் தேங்கி காணப்படுவதுடன் உள் வீதிகளிலும் போதியளவு வடிகாண் வசதி இன்மை காரணமாக வீதிகளில் நீர் தேங்கி நிற்பதால் மக்கள் போக்குவரத்து மேற்கொள்ள சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாங்கேணி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 தொடக்கம் 7 மணி வரையான நேரத்தில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதியில் 9 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் தேவாலயம் ஒன்று கூரைகள் இடிந்து விழுந்து பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் போரதீவு வெல்லவெளி பிரதான வீதியும் நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.