வெருகல் பகுதியில் இயற்கையை பாதுகாக்க முயன்ற இருவர் பொலிசாரால் கைது

-திருமலை நகர செய்தியாளர்-

வெருகல் பிரதேசத்தின் வட்டவான் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இருவரை ஈச்சிலம்பற்று பொலிசார் நேற்று திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.

வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரான கதிர்காமத்தம்பி திருநாவுக்கரசு மற்றும் வட்டவான் மரணசங்கத் தலைவரான தர்மலிங்கம் ஜெயகாந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வெருகல் நாதனோடையில் மணல் அகழ்வதற்கு எதிராக பொதுமக்கள் நேற்று எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள் இதன் பின்னனியில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

வெருகல் நாதனோடையில் 1000 கியூப் மண் அகழ்வதற்கான அனுமதி தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிலையில் , அப்பகுதியில் மண் அகழ்ந்தால் அது வெருகல் ஆற்றின் அணைக்கட்டை பாதிக்கும் எனவும், இதனால் அணைக்கட்டு உடைக்கப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்து அக்கிராம மக்கள் இன்றைய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு மணல் எடுக்க சென்ற வாகனத்தை நிறுத்தி திருப்பி அனுப்பியதாக கூறி பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த குறித்த பெண் செய்த முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை மூதூர் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஈச்சிலப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்