வெருகல்-நாதனோடையில் மணல் அகழ்வதை எதிர்த்து மக்கள் போராட்டம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-வெருகல் நாதனோடையில் மணல் அகழ்வதை எதிர்த்து அப்பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்காக வெருகல் பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் மணல் ஏற்றுவதற்காக செல்லும் வழியை மறைத்து மணல் ஏற்றுவதற்காக சென்ற வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாவலி கங்கையை அண்மித்த நாதனோடை ஊடாக வெள்ளம் பெருக்கெடுத்து சிறியளவில் காணப்பட்ட ஓடை 2008ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெரிதாக உடைப்பெடுத்துள்ளது.

இதனூடாக மக்கள் இடம்பெயர்ந்து வேறு கிராமங்களில் வசித்து வந்ததாகவும் அக்காலப் பகுதியில்  திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி வெள்ள நீரினால் மூழ்கி காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதேவேளை குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்காக அனுமதி வழங்கப்பட்ட போதிலும் பிரதேச மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வதினால் பாதிப்புகள் ஏற்படலாம் என தெரிவித்தே குறித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.