விஷம் அருந்திவிட்டு பாடசாலை வந்த மாணவன்
விஷம் அருந்திய நிலையில் பாடசாலைக்கு வந்த பாடசாலை மாணவர் ஒருவர் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பிரதான தமிழ் பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் சிலர் தன்னையும் தனது சகோதரியையும் தொடர்ந்து திட்டியதால் மனமுடைந்த மாணவன் தோட்டத்தில் இருந்த பூச்சிக்கொல்லி திரவத்தை குடித்து விட்டு பாடசாலைக்கு வந்ததாக வட்டவளை வைத்தியசாலை வைத்தியர்களிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.
பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மாணவன் பாடசாலைக்கு வந்ததாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்ததையடுத்து, ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.