விமான நிலையத்தில் இளைஞன் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து பாதுகாப்பு சோதனைச் சாவடிகளையும் கடந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை சென்னை செல்லும் விமானத்தில் தலைமறைவாக செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கால்சட்டை, சட்டை மற்றும் செருப்பு அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராண்ட்பாஸில் வசிக்கும் 23 வயதான இவர், சென்னையில் தனது தந்தையுடன் வசித்து வந்தவர், இதற்கு முன்பு இரண்டு முறை வெளிநாடு சென்று வந்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

சந்தேகநபரிடம் பயண ஆவணங்கள் அல்லது போர்டிங் பாஸ் எதுவும் இல்லாததைக் கண்டறிந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேகநபரின் சகோதரரைத் தொடர்பு கொண்ட பொலிஸார், சந்தேக நபர் மனநல சிகிச்சையில் இருப்பதாகவும், ஆனால் ஒரு மாதமாக அவர் மருந்தை உட்கொள்ளவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மனநல மருத்துவரிடம் அனுப்பப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.