இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த மெல்போர்ன் நீதிமன்றம்!

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில், பெண் ஒருவர் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு, மெல்போர்ன் நீதிமன்றம் , வழக்கு முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 18 ஆம் திகதி, இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும்  விமானத்தில், பெண் ஒருவர் விமான ஊழியர்களிடம், தன்னை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்ததை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட 41 வயதான சந்தேகநபர் மெல்போர்ன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இலங்கை பிரஜை, கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி, ஒரு மொழிபெயர்ப்பாளருடன் மெல்போர்ன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு, அவரை வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அத்துடன், கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட அவர், வாரத்தில் மூன்று நாட்கள் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டுமென்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் வழக்கு முடியும் வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து, நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

மேலும், குறித்த சந்தேகநபரான இலங்கையர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்