விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

சம்பவ தினமன்று வேகமாக நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற நிலையில் அம்மாணவன் கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நிந்தவூர் அல் அஸ்ரக் தேசிய பாடசாலையில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் பாரூக் முஹம்மது சீத் (வயது – 18) என அடையாளம் காணப்பட்டார்.

இதேவேளை இவரது சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு திடிர் மரண விசாரணை அதிகாரியினால் மரண விசாரணை இடம்பெற்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.

இது தவிர சடலத்தின் பாகங்கள் மேலதிக விசாரணைக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் கடந்த வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மின்கம்பத்தில் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் உயிர் இழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மாட்டுடன் மோதுவதை தவிர்க்க அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதி படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

விபத்தில் மதன் பவி லக்சான் (வயது – 23) என்கின்ற இளைஞனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

குறித்த சடலத்தை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் பார்வையிட்டு மரண விசாரணை மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். குறித்த பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.