விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு : பெண் வைத்தியர் விளக்கமறியலில்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர 29 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகேஷ்வரன் ராம்தாஸ் (வயது 41) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை பக்கமாக 200 மீற்றர் தூரத்தில் பெண் வைத்தியர் ஒருவருடைய காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதியான பெண் வைத்தியர், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்