வந்தடைந்தது 40,000 மெட்ரிக்தொன் எரிபொருள்

இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஊடாக வழங்கப்படுகின்ற 40,000 மெட்ரிக்தொன் டீசல்  உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை வலுச்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் இன்று திங்கட்கிழமை கொழும்பில் கையளிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக, எரிபொருளுக்கான கடனுதவியின்கீழ் கடந்த மார்ச் மாதம் 16, 20 மற்றும் 23 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்டவற்றின் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் நான்காவது தொகுதி இதுவாகும்.

கடனுதவி திட்டத்திற்குள் உள்வாங்காமல் 2022 பெப்ரவரியில் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ள 40,000 மெட்ரிக்தொன் எரிபொருள் உட்பட இன்று வழங்கப்பட்ட எரிபொருள் தொகுதியுடன் கடந்த 50 நாட்களுக்குள் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த எரிபொருள், அண்ணளவாக 200,000 மெட்ரிக் தொன் ஆகும்.