வடக்கு கல்விப்பணிப்பாளர் மீது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்-

வடமாகாண கல்வி அதிகாரிகளின் பக்கச்சார்புகளுக்கு வெளிமாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை வடமாகாண கல்வி அமைச்சில் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கூட்டம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த கூட்டம் தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு உரிய முறையில் தகவலெதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கை ஆசிய சங்கத்தை திட்டமிட்டு புறக்கணித்து எடுக்கப்பட்டுள்ள பக்கச் சார்புடைய எந்தவொரு ஒரு தீர்மானங்களுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் உடன்படப்போவதில்லை .

வடமாகாண கல்விப் பணிப்பாளரின் பொறுப்பேற்ற, திட்டமிடப்படாத, பக்கச் சார்பான இடமாற்ற நடைமுறைகளால் பல சிக்கல்கள் எழுந்துள்ளது.

இடமாற்ற நடைமுறைகளுக்கு வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை மட்டும் பலிக்கடாவாக்கும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப் போவதில்லை.

வடமாகாண கல்விப் பணிப்பாளராக ஏழு வருடங்கள் பூர்த்தி செய்துள்ள நிலையிலும், தொடர்ச்சியாக, இடமாற்ற சபை தீர்மானங்களை மீறி, இடமாற்ற சபையின் அனுமதியின்றி, பதிலீட்டு இடமாற்றம் வழங்கப்பட்ட பல ஆசிரியர்களுக்கு பல வருட காலங்களாக இட மாற்றங்களை ஒத்தி வைத்துள்ளார்.

அதேவேளை, ஒரே வருடங்களில் வழங்கப்பட்ட பதிலீட்டு இடமாற்றங்களின் போது, ஒரு பகுதியினருக்கு மீளவரும் திகதி குறிப்பிட்டும், இன்னொரு பகுதியினருக்கு திகதி குறிப்பிடாமல் பாரபட்சமான முறையில் இடமாற்றங்களை செயற்படுத்தி இருக்கின்றார்.

ஒரே பகுதி இடமாற்றங்களுக்கு வெவ்வேறு நிபந்தனைகள் மூலம் பாரபட்சங்கள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளைஇ கொவிட் – 19 தொற்று காலத்தின் நெருக்கடி நிலையில் நாடு இருந்த பொழுதில், அந்த காலகட்டத்தில், இடமாற்ற சபையின் அனுமதி பெறப்படாமல் ஒருசிலருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த மாவட்டத்துக்கு முறையற்ற வகையில் இட மாற்றங்களை வழங்கியுள்ளார்.

மருத்துவக் காரணங்களுக்காகவும், குடும்ப நெருக்கடி களுக்காகவும் தமது சொந்த வலயங்களிற்கு தற்காலிக இணைப்பு கோரி நிற்கும் வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கு கூட, பல இழுத்தடிப்புகளை வடமாகாண கல்விப் பணிப்பாளர் செய்து வருகிறார்.

யாழ். மாவட்டத்தில் இருந்து, வெளிமாவட்ட சேவை எதனையும் செய்திராத பலரை தொடர்ச்சியாக பாதுகாத்து பக்கச்சார்பான இடமாற்ற நடைமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றார்.

இவ்வாறான, பக்கச்சார்பான செயற்பாடுகளால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் முறையற்ற இடமாற்ற நடைமுறைகளால் வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப் போவதில்லை.

எனவே. ஆசிரிய இட மாற்றங்கள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட பாரபட்சமான தீர்மானங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம், என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.