மைதானத்தின் வாயிலை அடாத்தாக பூட்டிய அங்கஜனின் தந்தை: பூட்டை உடைத்து உள்நுழைந்த இளைஞர்கள்

-யாழ் நிருபர்-

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், நெல்லியடியிலுள்ள விளையாட்டு மைதானத்தை தன்னிச்சையாகப் பூட்டிய நிலையில் அதை இளைஞர் குழுவினர் சிலர் நேற்று திங்கட்கிழமை மாலை உடைத்துள்ளனர்.

மேற்படி விளையாட்டுக்கழக மைதானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் மனைவி பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்தை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் தந்தையார் இராமநாதனின் சகோதரரான ராஜனே ஒழுங்கு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம் பெற்றிருந்தது.

இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்றையதினம் மேற்படி மைதானம் திடீரென இரண்டு பூட்டுக்கள் போட்டு பூட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு தரப்பினரையும் நெல்லியடிப் பொலிஸார் அழைத்து கலந்துரையாடினர். மைதானத்தைத் திறந்து விடுமாறு அறிவுறுத்தப்பட்டபோதும்இ நேற்று மாலை வரையில் மைதானம் திறக்கப்படாத நிலையில் அதன் பின்னர் பூட்டு உடைக்கப்பட்டுஇ பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்டன.