மூடப்படும் நிலையில் தேயிலைத் தோட்ட தொழிற்சாலைகள்

நாடளாவிய ரீதியிலான மின் துண்டிப்பு, 10 மணித்தியாலங்கள் நீடிக்கப்படுதல் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு தேவையான டீசல் கிடைக்காமை போன்ற காரணங்களால் நாளை வியாழக்கிழமையிலிருந்து தேயிலைத் தோட்டங்களின் அன்றாட செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோட்ட முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்த மின் துண்டிப்பால் தேயிலைத் தொழிற்சாலையின் தேயிலைத் தூள் உற்பத்தியானது, மின் பிறப்பாக்கி இயந்திரம் மூலமே முன்னெடுக்கப்படுவதாகவும் குறித்த இயந்திரத்துக்காக நாளொன்று பாரிய தொகை டீசல் ​தேவை என்றும் தோட்ட முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்து விநியோகத்திலிருந்து உற்பத்தி வரை அனைத்துக்கும் மின்சாரம் அவசியம் என்றும் தேயிலைக் கொழுந்துகளை காயவைத்து, தூளாக்குவதற்கு போதியளவு நேரம் தேவை என்றும் குறித்த நேரப்பகுதிக்குள் அதனை காய வைக்க முடியாவிட்டால், இயந்திரத்துக்குள் போடப்படும் கொழுந்து முழுமையாக அழிவடையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
 

இந்த நிலையில் தேயிலை உற்பத்தி செயற்பாடுகள் பாரிய ஸ்தம்பிதத்தை எதிர்நோக்கியுள்ளதால், தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொடுப்பதற்கான முறையொன்றை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திடம் தோட்ட அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.