முதற் காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவி

ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டொலர் பணப்பறிமாற்றல் உள்ளடங்கலாக இவ்வாண்டின் முதற்காலாண்டில் இந்தியா இலங்கைக்கு 2.5 பில்லியன் கடனுதவியை வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் நாட்டை வந்தடைந்த 40 000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடமிருந்து , வலு சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நேற்று முன்தினம் பெற்றுக் கொண்டிருந்தார்.

இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

இந்நிகழ்வில் உரையாற்றிய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, தற்போதைய சூழ்நிலையில் அண்டை நாட்டுக்கு முதலிடம் என்ற கொள்கைக்கு இணங்க இலங்கை மக்களுக்கு இந்தியாவின் அர்ப்பணிப்பின் உறுதியான வெளிப்பாடாக எரிபொருள் விநியோகத்தை சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் இந்த உதவிகளுக்கு வலு சக்தி அமைச்சர் காமினி லொக்குகே நன்றி தெரிவித்தார்.

முன்னதாக, மார்ச் 23 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கான சமீபத்திய இந்திய பொருளாதார மேம்பாட்டு உதவி மற்றும் கடன் வசதிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இலங்கையின் வளர்ச்சியில் இந்திய அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியும் இலங்கை அரசாங்கமும் கையெழுத்திட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.