மின்சார வாகன இறக்குமதிக்கு வழங்கிய அனுமதி : ஆயிரம் மில்லியனுக்கும் அதிக நட்டம்!
புலம்பெயர் பணியாளர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் மூலம் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக 1,384 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய முறைமையை நடைமுறைப்படுத்துவதில் வெளிப்படைத் தன்மை பாதுகாக்கப்படவில்லை என்றும், கட்டுப்பாட்டு முறைகளை முற்றிலும் புறக்கணித்து திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலம்பெயர் இலங்கை பணியாளர்களின் பணவனுப்பலை ஊக்குவிக்கும் நோக்கில், குறித்த பணியாளர்களால் அனுப்பப்படும் பணத்தின் அளவுக்கு ஏற்பட்ட மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான திட்டத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு 2022 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது.
வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வேளையில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தின் பிரகாரம் வெளிநாட்டு பணியாளர்களுக்கு மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் வாகனத்திற்கு விதிக்கப்பட்ட சொகுசு வரி விலக்கு வரம்பு 6 மில்லியன் ரூபாயிலிருந்து 12 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
குறித்த தீர்மானத்துக்கமைய, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை 1,077 அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 77 இரத்து செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் திகதிக்குள் ஆயிரம் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களில் 510 அனுமதிப்பத்திரங்களே இறக்குமதிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த திகதிக்குள் 375 மின்சார வாகனங்கள் மாத்திரமே மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்படி, மின்சார வாகனங்கள் இறக்குமதி தொடர்பாக 2022 மே மாதம் முதலாம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி வரை செயல்படுத்தப்பட்ட திட்டம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த செயல்முறை தொடர்பான அடிப்படை மற்றும் அத்தியாவசிய தகவல்களை ஆவணப்படுத்தும் முறையை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பின்பற்றவில்லை என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பான அனைத்து விடயங்களையும் அமைச்சின் பல அதிகாரிகள் முறைகேடாக பின்பற்றியமையினால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மீறப்பட்டுள்ளமை கவனிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடு சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத நால்வருக்கும் மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
அதேநேரம், குறுகிய காலத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும், இடையிடையே வெளிநாடு சென்றவர்களுக்கும் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அனுமதிப்பத்திரங்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட 375 வாகனங்களில் 84 வாகனங்கள் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்தவர்களில் 164 மாலுமிகள், 150 முகாமையாளர்கள், 96 பணிப்பாளர்கள், 78 பொறியியலாளர்கள், 61 அதிகாரிகள், 24 ஆலோசகர்கள், 3 மருத்துவர்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் நடுவர் ஒருவரும் உள்ளடங்குவதாக குறித்த கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos