
மாணவியை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில் இருவருக்கு பிடியாணை
நீதிமன்றத்தை புறக்கணித்த குற்றத்திற்காக, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷினி பெரேரா குணவர்தன மற்றும் முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க புஸ்பகுமார ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தில் (SLIIT) கல்வி கற்கும் நிபுனா ராமநாயக்க என்ற மாணவியை கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பிலேயே இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் முதலாம் மற்றும் ஆறாவது பிரதிவாதிகளான இந்த இரண்டு பிரதிவாதிகளும் நேற்று விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், அவர்கள் ஆஜராகவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்கள் முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு மேலதிகமாக அவரது மகன் ரவிந்து வாஸ் குணவர்தன, அவரது மனைவி ஷியாமலி பிரியதர்ஷினி பெரேரா குணவர்தன, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக புஷ்ப குமார, சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவில் கடமையாற்றிய பி.டி.பிரியங்கர டி சில்வா, வை.எம். லக்ஷ்மன் திலகரத்ன, சந்துன் திஸாநாயக்க மற்றும் சமன் விதான ஆகிய ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குறித்த மாணவியை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் உட்பட 13 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.