மருத்துவர்கள் போல உடையணிந்து மருத்துவமனைக்குள் நுழைந்து போராளியொருவர் கடத்தல்!
இஸ்ரேலில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் போன்று உடையணிந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், மேற்கு கரையில் உள்ள மருத்துவமனைக்குள் நுழைந்து, பாலஸ்தீன போராளியொருவரை கடத்தி சென்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் தாக்குதலில் இரண்டு நாட்களிற்கு முன்னர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, பாலஸ்தீன போராளி உறுப்பினர் ஒருவரையே இஸ்ரேலிய படையினர் இவ்வாறு கடத்தி சென்றுள்ளனர்.
மருத்துவர்கள், தாதிமார்கள், சாதாரண பாலஸ்தீனிய பெண்கள் போன்று உடையணிந்து வந்த 20க்கும் அதிகமான இஸ்ரேலின் இரகசிய விசேட படைப்பிரிவினர், அவரை கடத்தி சென்றுள்ளனர் என்றும் ஆறு நிமிடங்களில் அந்த கடத்தல் நடவடிக்கை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கை இடம்பெற்றவேளை, அங்கிருந்தவர்கள் எடுத்துள்ள வீடியோக்கள், மருத்துவர் போன்று உடையணிந்த ஒருவர் அந்த நபரை சக்கரநாற்காலியில் வைத்து நேபிலஸ் மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு சென்று இலக்கத்தகடற்ற வாகனத்தில் ஏற்றுவதை காண்பித்துள்ளன, என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.