மயிலத்தமடு மேய்ச்சல்தரை பிரச்சினை முடிவுக்கு வந்தது – கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிப்பு

மட்டக்களப்பு – மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளதாக, ரணில் செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜுலை மாதம் 2ம்வாரத்தில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அப்போது பண்ணையாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கு ஆர்வமாக உள்ளதாகவும் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர், மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள், வனத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்திருந்தார்.

இதன்போது பண்ணையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு உத்தரவு பிறப்பித்த போதும் அது நடைமுறையில் செயற்படுத்தப்படாதது ஏன் என ஜனாதிபதி அதிகாரிகளிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்,  மேலும் இது தொடர்பில் உரிய தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை விவகாரத்தில் முழுமையான தீர்வு எட்டப்பட்டமை குறித்து கணபதிப்பிள்ளை மோகனிடம் ஜனாதிபதி தொலைபேசி மூலம் உரையாடியதாக ,அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்