மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் தொடர்பான விசாரணைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற பெண்ணும் அவரது சிசுவும் உயிரிழந்தமைக்கு நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த தரப்பினர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, வைத்தியசாலை வளாகத்தில் உள்ள சி.சி.ரி.வி. காணொளி காட்சிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற பெண்ணும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதன்படி, நேற்றைய தினம் வடமாகாண சுகாதார அமைச்சின் ஒழுக்காற்று விசாரணைக் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது.

அதேநேரம், அந்த குழு எதிர்வரும் திங்கட்கிழமையும் மன்னார் வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளில் ஈடுபடுமென வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.பத்திரன தெரிவித்தார்.

அத்துடன் சுகாதார அமைச்சின் இரண்டு குழுக்களும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

குறித்த குழுக்களின் விசாரணை அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ராஜஸ்ரீ என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பிரசவ அறைக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட வைத்தியர் சுகவீன விடுமுறையில் சென்றுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.பத்திரன தெரிவித்தார்.

இதன்படி, குறித்த பதவிக்கு மற்றுமொரு வைத்தியர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான ராஜஸ்ரீ என்ற பெண் அண்மையில் உயிரிழந்தார்.

வைத்தியசாலை தரப்பினரின் கவனக் குறைவு காரணமாகவே குறித்த பெண்ணும் சிசுவும் உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன் அந்த பெண்ணுக்கு நீதிக்கோரி சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் இதன்போது சில பொது சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, எம்னியோடிக் ஃப்ளியூட் எம்போலிசம் (Amniotic fluid embolism) என்ற நோய் நிலைமையின் காரணமாகவே, குறித்த பெண் உயிரிழந்தமை ஆரம்ப கட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

கர்ப்பிணி பெண் ஒருவரின் பனிக்குடப்பை கசிந்து அதிலிருந்த நீர் இரத்த குழாயில் கலப்பதன் காரணமாக இந்த நோய்நிலைமை ஏற்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.பத்திரன தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்