மன்னார் தீவு பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ளும் என எச்சரிக்கை : அச்சத்தில் மக்கள்

-மன்னார் நிருபர்-

மன்னார் தீவு பகுதியானது பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ள நேரிடலாம். என துறைசார்ந்த நிபுணர்கள் எச்சரிப்பதால் மக்கள் மத்தியிலே அச்ச நிலை தோன்றியுள்ள நிலையில் காற்றாலை அமைத்தலும் கனிய மணல் அகழ்வும் தொடர்வதால் இது தொடர்பாக கலந்துரையாடலுக்கான நடவடிக்கையை உடன் மேற்கொள்ள வேண்டும் என அரச அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு காற்றாலை மற்றும் கனிய மண் தொடர்பாக நேற்று சனிக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் தீவுப்பகுதியில் ஏலவே முப்பது காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது 21 காற்றாலைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளன.

பெருநிலப்பரப்பில் மாதிரி கிராமம் தொடக்கம் முள்ளிக்குளம் வரை முப்பத்தெட்டு காற்றாலைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதற்கு அப்பால் அதானியின் நிறுவனமும் காற்றாலை அமைக்கும் பணியை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரீட்சாத்திரமாக தொடங்கப்பட்ட கனிய மண் அகழ்வு பல ஆயிரக்கணக்காக துளையிட்டு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

மன்னார் தீவு பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரம் குறைந்த நில அமைப்பை கொண்டதாகும்.

இவ்விதமான செயற்பாட்டால் மன்னார் தீவுப்பகுதியானது பெரும் இயற்கை அனர்த்தத்தை எதிர் கொள்ள நேரிடலாம். என துறைசார்ந்த நிபுணர்கள் எச்சரிப்பதால் மக்கள் மத்தியிலே அச்ச நிலை தோன்றியுள்ளது.

எனவே, இவ் விடயம் தொடர்பாக துறை சார்ந்த திணைக்களங்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கி விரைவாக கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம், என இவ்வாறு அரச அதிபருக்கு 25.08.2022 அன்று வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மன்னார் மாவட்டத்தின் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இக் கடிதத்தின் பிரதிகள் வட மாகாணம் ஆளுநர், மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.