மட்டு.வாகரை பிரதேச சபை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வசம்!

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கைப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதித்தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை பிரதேச சபை சபா மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த பல்கோஸ் மோகனராசா முன்மொழிந்து வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக தமிழ் மக்கள விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்மொழியப்பட்டார்

இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு செய்ய திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு 8 உறுப்பினர்களும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த 11உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதன்போது தவிசாளராகப் போட்டியிட்ட பல்கோஸ் மோகனராசாவுக்கு 7 வாக்குகளும் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரனுக்கு 12 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

அதன்படி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

அதையடுத்து பிரதித்தவிசாளர் தெரிவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சன்முகநாதன் ரசிகரன் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருந்தார்.

இதன்போது சன்முகநாதன் ரசிகரனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் மொஹமெட் ஹைதஐக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது

அதன்படி பிரதித்தவிசாளராக சண்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார்.