மட்டு.அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பிரதேச ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு? ஊடகவியலாளர்கள் கடும் விசனம்!

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் இக்கூட்டத்திற்கு அரச தகவல் திணைக்களத்தினால் ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இக்கூட்டத்திற்கு ஊடகக் கடமையில் ஈடுபடுவதற்காக அரச தகவல் திணைக்களத்தினால் 2023-2024 ஆம் ஆண்டிற்காக ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளதாகவும், ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வுக்கு சமூகம் தரும்போது அவ்வழைப்பிதழ்களைக் கொண்டுவருவது அவசியம் எனவும் மாவட்ட ஊடகப்பிரிவின் தகவல் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அடையாள அட்டைகளை அச்சிடுவதில் சிக்கல் நிலை இருப்பதால் 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஊடக அடையாள அட்டை பலருக்கு வழங்கப்படவில்லை. தேசிய ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பலருக்கும் 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஊடக அடையாள அட்டை இதுவரை வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகபிரிவின் தகவல் பொறுப்பதிகாரி இவ்வாறான ஒரு அறிவித்தலை வெளியிட்டுள்ளது பொருத்தமானதாக இல்லை என, மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தகவல் திணைக்கள அடையாள அட்டை வைத்திருப்பவர்தான் கூட்டத்தில் காணொளிகளை பதிவு செய்யலாம் என்ற வரையறை இருந்தால் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது முகப்புத்தக பக்கங்களில் அபிவிருத்தி கூட்டத்தை நேரலை செய்வதையும் அனுமதிக்ககூடாது.

செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் போது, ஊடகதுறைக்கு சம்மந்தமே அல்லாத அரசில்வாதிகளின் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு நின்று நேரலை செய்வதை அனுமதிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அடையாள அட்டை இல்லாத ஊடகவியலாளர்கள் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு அனுமதிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அரசியல்வாதிகளின் முகப்புத்தகங்களில் நேரலைகள் பதிவிடப்பட்டால் அதற்கு மாவட்ட ஊடக பிரிவின் பொறுப்பதிகாரி பதில் சொல்ல வேண்டும்

இவ்வாறான கூட்டங்களில் ஊடகவியலாளர்களை விட அரசியல்வாதிகளின் தனிப்பட்ட ஊடக பிரிவினரே ஒளிப்பதிவு செய்யும் கருவிகளோடு அதிகமாக நிற்பதை கடந்த காலங்களில் இடம்பெற்ற கூட்டங்களில் காணக்கூடியதாக இருந்தது.