மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு வயதுத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம்!

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு வயதுத் திருமணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி  இந்துமதி ஹரிஹரதாமோதரன் தெரிவித்தார்.

மாண்புடன் கூடியதாக மாதவிடாய்  செயற்பாட்டை நிலைநிறுத்துவதற்கு பாலியல் உற்பத்தி சுகாதார உரிமைகளே அடிப்படை” எனும் இவ்வாண்டிற்கான சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக  தொடர்சியாக அமைந்த நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி இந்து இளைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா கலந்து கொண்டார்.

அங்கு, மாவட்டச் செயலாளர்,  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி எல். பிரசாந்தி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சிறுவர் மகளிர் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள்,  உளவத் துணையாளர்கள், பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,  ஆகியோர் மத்தியில் திட்டத்தின் நோக்கம் பற்றி விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி  இந்துமதி தெளிவுபடுத்தினார்.

பெண் பிள்ளைகளையும் பெண்களையும் கண்ணியப்படுத்தும் விழிப்புணர்வை ஊட்டுவதான இந்தத் திட்டம் முதலில்  பாடசாலை மட்டத்திலிருந்து துவங்கும்.

பின்னர் அது  அலுவலகங்கள், பணியிடங்கள், வேலைத் தலங்கள், கிராமப் புறங்கள் என்று வியாபித்துச் செல்லும். பெண் பிள்ளைகளையும் பெண்களையும் கண்ணியப்படுத்த மாதவிடாய்க்  கருத்தியலை உள்வாங்கச் செய்து அதன் தாற்பரியங்களை விழிப்புணர்வூட்டுவதே இதன் நோக்கமாகும்.

இதன் மூலம் இள வயதுத் திருமணங்கள் இடம்பெறுவதை இல்லாதொழிப்பதோடு பெண்பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான பாரபடசங்களையும் ஓரங்கட்டலையும் முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

அதன் மூலம் சமூக நெறிபிறழ்வுகளையும் சமூகச் சீரழிவுகளையும் தடுக்க முடியும் அதற்காகவே இந்த “மாண்புடன் கூடிய மாதவிடாய் எண்ணக்கருவினை பரவலாக்கும்  திட்டம் அமுலாகிறது” என்றார்.

நிகழ்வில் பாடசாலைச் சிறுமிகள், பெண் பிள்ளைகள், தொழில் புரியும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், சமூகப் பிற்போக்குவாதக் கருத்தியல்களால் பெண்கள் முகங்கொடுக்கும் சவால்கள், பாரபட்சங்கள், ஓரங்கட்டுதல்கள், பாதிப்புக்கள் பற்றிய கருத்துக்கள் பங்குபற்றியோரால் சுட்டிக்காட்டப்பட்டன.

இந்நிகழ்வில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் நிருவாக  அலுவலர்  கே.  நிர்மலா, திட்ட உத்தியோகத்தர்  புண்ணியமூர்த்தி ஜீவிதா,  சமூக ஒருங்கிணைப்பாளர்களான  பி. முரளீதரன், கே. சிந்துஜா, கே. லக்ஷானா, கே. துதர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.