மட்டக்களப்பு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது

-மட்டக்களப்பு நிருபர் – க.கிருபாகரன்

மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்த வேளை இளைஞர் ஒருவரை துப்பாக்கி ரவையுடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

வாகரையைச் சேர்ந்த 22 வயதுடைய மீனவத் தொழிலில் ஈடுபடும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரான் கோரகல்லிமடு விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் வாகனங்களில் கட்சி ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதுவித குழப்பமின்றி சற்று தாமதித்து நடைபெற்றது.

கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார்.