மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாயமாதா திருத்தலத்தின் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்
-மட்டக்களப்பு நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாயமாதா திருத்தலத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் செப்டம்பர் 08ஆம் திகதி வரை ஆயித்தியமலை புனித சதாசகாயமாதா திருத்தலத்தின் திருவிழா இடம்பெறவுள்ளதனால் விழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயும் வகையில் இக்கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.
பெருவிழா கூட்டுத் திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய கலாநிதி பொன்னையா யோசப் ஆண்டகைபினால் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
திருவிழாவிற்கான பாதயாத்திரை எதிர்வரும் செப்டெம்பர் 07 திகதி காலை 5 மணிக்கு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெறவுள்ள திருப்பலியைத் தொடர்ந்து வவுணதீவூடாகவும் மற்றும் செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்தில் காலை 5 மணிக்கு நடைபெறவுள்ள திருப்பலியைத் தொடர்ந்து கரடியனாறு ஊடாகவும் அன்னையின் திருத்தலத்தைச் சென்றடையவுள்ளது.
இதன் போது திருவிழாவிற்கான போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர் மற்றும் பாதுகாப்பு, மின்சாரம் வழங்கல் போன்ற விடங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது புனித சதாசகாய மாதா திருத்தல நிருவாகி அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன்ட்,மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் , பொலிஸ் உயர் அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார அதிகாரிகள், மற்றும் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்