
மட்டக்களப்பு வாகன விபத்தில் : 3 வயது சிறுமி உட்பட இருவர் பலி
மட்டக்களப்பு சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 3 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியூடாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த வேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காத்தான்குடியை சேர்ந்த 3 வயது சிறுமி மற்றும் அவரது தாத்தாவுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குறித்த வேன் விபத்துக்குள்ளானதுடன் இதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரில் சிறுமி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதுடன் , சிறுமியின் தாத்தாவும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இருவரது சடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தின் போது வாகனமும் பாரியளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இவ்விபத்து ஏற்ப்பட்ட சந்திவெளியின் பிரதான வீதிப்பகுதியில் அடிக்கடி வீதி விபத்துக்கள் சம்பவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.