மட்டக்களப்பில் மதுபோதையில் வந்த குழுவொன்று கிராமசேவகர் மீது தாக்குதல்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன்தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர், வெளிக்கள கடமை முடிந்து அலுவலகம் திரும்பும் வழியில், மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாசீவன் தீவு துறையடியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில், பாதிக்கப்பட்ட கிராம சேவகர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட கிராம சேவகர் தெரிவிக்கும் போது,

பிரதேசவாசி ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றினுள் அத்துமீறி வேலி அமைத்திருந்த தகவல் அறிந்து, நான் நேரில் சென்று அதனை அகற்றுமாறு கூறியபோது, அவர் என்னுடன் முரண்பட்டார்.

குறித்த காணி விடயம் தொடர்பாக மேற்படி நபர், இன்று எனது அலுவலகத்திற்கு வருகை தந்து முரண்பாட்டில் ஈடுபட்டார், பின்னர் நான் எனது வெளிக்கள கடமை நிமித்தம் வெளியில் சென்றபோது, குறித்த நபர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் கம்பு, பொல்லுகள் சகிதம் வந்து என்னை தாக்கினார்கள்

இதன்போது, அங்கிருந்த சிலர் என்னை அவர்களிடமிருந்து பாதுகாத்தனர், என தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த, கோறளைப்பற்று பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர்கள் பாதிக்கப்பட்ட கிராமசேவகரை நேரில் சென்று பார்வையிட்டனர்.

சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.