மட்டக்களப்பில் நிலவும் கடும் வறட்சி: பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்து குடிநீர் விநியோகம்
– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் இம்மாவட்டத்தில் மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறாததால் வரட்சியான காலநிலை மாற்றமின்றி தொடர்ந்து நிலவுகின்றது. இதனால் மாவட்டத்தில் 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8 ஆயிரத்து 892 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 508 நபர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
செங்கலடி பிரதேச செயலக பிரிவில் 2561 குடும்பங்களைச் சேர்ந்த 8805 நபர்கள் அதிகபட்சமாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச செயலக பிரிவில் 2161 குடும்பங்களைச் சேர்ந்த 6856 பேரும், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 1729 குடும்பங்களைச் சேர்ந்த 6300 பேரும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில் 1438 குடும்பங்களைச் சேர்ந்த 4341 பேரும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் 853 குடும்பங்களைச் சேர்ந்த 2681 பேரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 525 பேரும் வறட்சியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அனர்த்த நிவாரண சேவை திணைக்களத்தினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் தகவல் தெரிவித்தார்.