
மட்டக்களப்பில் திறன்மிகு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை
– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பில் திறன்மிகு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான பயிற்சி பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அனுசரணையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்து வதற்கான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்தல், சந்தைப்படுத்தலில் ஏற்படுகின்ற சிக்கல்கள் செலவு, வீண் விரயங்கள், சேமிப்பு போன்றவையும், வெளிநாட்டு சந்தையில் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி தரத்திக்கான அங்கீகாரம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் சிறிய சந்தைப்படுத்தல் வலையமைப்பு, முகாமைத்துவ நடைமுறை, மனித வள முகாமைத்துவம், விலைத் தொழில்நுட்பம் ஆகிய விடயங்கள் தொடர்பாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.புவனேந்திரன் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் வட கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.அர்ச்சுதன், சிரேஷ்ட உற்பத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சீத்தானி அபயரத்ன, மற்றும் நதிக்கா பண்டார, 14 பிரதேச செயலக பிரிவுகளின் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறிய நடுத்தர முயற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்