மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு – இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும், மாவட்டச் செயலாளருமான ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில், மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் சாரணர்கள் செயற்பாட்டை ஊக்குவித்து மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட சாரணர் நிருவாக கட்டமைப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட சாரணர் சங்கத்தின் செயற்குழுவின் தவிசாளரும், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளருமான வை. ஜயச்சந்திரன், செயற்குழுவின் செயலாளரும், கிழக்கு மாகாணக் கலாசார மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருமான எஸ். நவநீதன் செயற்குழுவின் பொருளாளரும், கணக்காய்வு அத்தியட்சகருமான ரொபேர்ட, மாவட்ட சாரணர் சங்கத்தின் பதில் மாவட்ட சாரணர் ஆணையாளரும், இலங்கை சாரணர் சங்கத்தின் உதவிப் பிரதம ஆணையாளருமான அமிர்தன் கார்மேகம், இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமைக் காரியாலய ஆணையாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான பி. சசிகுமார் உட்பட மாவட்ட உதவி ஆணையாளர்களும், மாவட்ட சாரணத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.