மட்டக்களப்பில் இரவில் மக்களை மிரட்டி வாக்கு பெற முயற்சி :சைக்கிள் சுரேஸ்

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்தி வாக்குளை பெற்ற ஒட்டுக்குழுக்கள் தற்போது இரவில் குழுக்களாக கிராமங்களுக்குள் புகுந்து தாய்மார்களை மிரட்டி வாக்குகளை பெறுவதற்கான சூட்சமங்களில் ஈடுபடுகின்றனர் எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலை கவனமாக கையாளவேண்டும் அதேவேளை தேர்தலை ஜனநாயக முறையில் நடாத்த தேர்தல் திணைக்களம், ஜனாதிபதிதேர்தல் கண்காணிப்பு குழு அமைப்புக்கள்  செயற்பட வேண்டும் என சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வொஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் 2009 க்கு பின்னர் இருந்த காலங்களைவிட மிக இறுக்கமான தேர்தலை கையாளுகின்றனர். கடந்த காலங்களில் ஒட்டுக்குழுக்கள் தங்களது ஆயுதங்களை பயன்படுத்தி அச்சுறுத்தலை செய்து முதலமைச்சர் பதவிகளையும் ஏனைய சலுகைகளையும் பெற்றுக் கொண்ட இந்த ஊழல்வாதிகள் இந்த தேர்தலையும் ஒரு ஜனநாயக ரீதியில் நடாத்த விடாமல் மக்கள் மத்தியில் சென்று அவர்களை மீண்டும் மிரட்டி வாக்குகளை பெறுகின்ற ஒரு பயங்கரமான நிலைப்பாடு நடந்தேறுகின்றது.

குறிப்பாக ஜெயந்திபுரத்தில் கருணா பிள்ளையான் கட்சி ஆதரவாளர்களுக்குள்ளே இடம்பெற்ற மோதலில் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று என்னுடைய சொந்த ஊரான படுவான்கரை பிரதேசத்திலுள்ள முனைக்காடு பிரதேசத்தில் நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கேயும் பிள்ளையானின் அடியாள் ஒருவர் வந்து பிள்ளையான் வீதி அமைத்துள்ளார் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இவ்வாறு கடந்தகாலத்தில் ஆயுத முனையில் அச்சுறுத்தல் செய்தது போல் இந்த தேர்தலில் குழுக்களாக சேர்ந்து அச்சுறுத்தலை மேற்கொண்டு ஒரு ஜனநாயக வழியில் தேர்தலை நடாத்த விடாமல் அச்சுறுத்தல் வழியில் தங்களுக்கான வாக்குகளை பெறுவதற்கு முயற்சிக்கின்றனர்.

தமிழ் மக்களை இதுவரை ஏமாற்றி வந்துள்ள தரப்புக்களை ஒதுக்கப் போகின்றனர் என்ற நிலைப்பாட்டை அறிந்த ஒட்டுக்குழுக்கள் கிராமங்களிலே இரவு வேளைகளில் உட்புகுந்து மக்களையும் தாய்மார்களையும் மிரட்டி வாக்குகளை பெறுவதற்கான சூட்சமங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் இந்த ஊழல் வாதிகளையும் ஒட்டுக்குழுக்ககளையும் நிராகரிக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏற்கனவே மிக மோசமான அச்சுறுத்தலுக்கு உட்பட்ட நிலையிலே இந்த தேர்தலும் அவ்வாறான நிலை காணப்படுகின்றது எனவே தேர்தலை ஜனநாயக முறையில் நடாத்த தேர்தல் திணைக்களம், ஜனாதிபதி, தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் பெப்ரல் அமைப்பு விளங்கி கொண்டு செயற்படவேண்டும்.

எனவே தேர்தலை மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் ஏற்கனவே இடம்பெற்ற தேர்தல் போன்று இந்த தேர்தலை கையாளக்கூடாது ஏன் என்றால் இந்த தீவிலே தமிழ் மக்கள் உரிமையோடு எதிர்காலத்தில் வாழக்கூடிய வகையில் வடகிழக்கிலுள்ள தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களிலே இருந்த தமிழ் தலைமைகள் அத்தனை பேரும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிறைவேற்றும் முகமாக அவர்களது நடவடிக்கைகள் இருந்ததுடன் இந்திய பிரதமருக்கு 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த ஏழு கட்சிகளும் தான் இன்று பிரிந்து நின்று சங்கிலும் வீட்டிலும் கேட்கின்றனர் இந்த வடக்கு கிழக்கிலே ஒரு நேர்மையான உறுதியான தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கொண்டு செல்லக் கூடிய வகையில் எமது கட்சி தலைவர் கஜேந்திரகுமார் செயற்படுகின்றார் கடந்த 15 வருடமாக மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என உறுதியாக இருக்கின்றார். அப்படிப்பட்ட அவருக்கு மக்கள் திரண்டு கூடிய ஆசனங்களை வழங்கும் பட்சத்தில் தான் வரவிருக்கும் பெரும் ஆபத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.

வீடு, சங்கில் போட்டியிடுகின்றவர்கள் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை விரும்பி ஒத்துழைப்பார்கள் இவர்கள் இங்கே தேர்தலில் பிரிந்து நின்று கேட்டாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக வருகின்றபோது ஜனாதிபதியுடன் இணைந்து ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்கு செல்வார்கள் என்பதை மக்கள் உணரவேண்டும். எனவே கஜேந்திரகுமார் அணிக்கு குறைந்த பட்சம் 10 ஆசனங்களை மக்கள் வழங்குகின்ற போது ஜனாதிபதியின் இந்த சதியை கண்டிப்பாக முறியடிப்போம் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்