மட்டக்களப்பில் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களை நோக்கி மாணவர்கள் வருகை

-மட்டக்களப்பு நிருபர்-

நாடாளாவிய ரீதியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் நண்பகல் 12.15 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களது பெற்றோர்களுடன் வருகை தருவதை அவதானிக்க முடிந்தது.

இதன்போது மட்டக்களப்பு,மட்டக்களப்பு மத்தி,பட்டிருப்பு,கல்குடா மற்றும் மண்முனை மேற்கு கல்வி வலயங்களிலுள்ள மாணவர்களும் தமது பெற்றோர்கள் சகிதம் பரீட்சை நிலையங்களுக்கு ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.

இம்மாணவர்கள் பரீட்சை நிலையத்துக்கு வருகை தரும்போது தத்தம் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அத்தோடு தமது தாய்,தந்தையர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.

இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து இருபதாயிரத்து எண்ணூற்று எழுபத்து ஒன்பது மாணவர்கள் (320879) தோற்றவுள்ளதோடு நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழல் காரணமாக புலமைப்பரிசில் பரீட்சை உட்பட சாதாரண மற்றும் உயர் தரப்பரீட்சைகள் இடம்பெறும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டு மாணவர்கள் உரிய நேரத்தில் தங்களது பரீட்சைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதியுற்றனர். எனினும் தற்போது நாட்டின் நிலைமை சீராக்கப்பட்டு வருவதுடன் பரீட்சைகளும் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை 2025 ஆம் ஆண்டில் பரீட்சைகள், கால அட்டவணைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் ஆகியவை தாமதமின்றி செயல்படுத்தப்படும் என நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை பரீட்சை நிலையங்களைச் சுற்றி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

  மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்