போலி சாரதி அனுமதி பத்திரங்களை தயாரித்த மூவர் கைது!
பொலநறுவை-மன்னம்பிட்டி பகுதியில், போலி சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் வாகனப் பதிவு ஆவணங்களைத் தயாரித்ததாக கூறப்படும், மூன்று சந்தேக நபர்களை, பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
குறித்த பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், பிரதான சந்தேக நபரான மன்னம்பிட்டியவை சேர்ந்த, 48 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்
அவரிடம் 19 போலி சாரதி அனுமதி பத்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, போலி உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவு புத்தகங்களை தயாரிப்பதில் அவர் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
விசாரணையில் கிடைக்கபெற்ற தகவல்களின் அடிப்படையில், கொழும்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்
வெரஹெரா மோட்டார் போக்குவரத்து திணைக்கத்திற்கு அருகில் இருந்து ஒருவரும், நாரஹென்பிட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கத்திற்கு அருகில் இருந்து ஒருவருமாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
39 மற்றும் 60 வயதுடைய குறித்த சந்தேக நபர்களில் ஒருவர், வெரஹெரா பகுதியில் சாரதி பயிற்சி பாடசாலையை நடத்தி வருகிறார் எனவும், மற்றையவர், நாரஹென்பிட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கத்திற்கு அருகில், போலி ஆவணத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடாத்தி வருகிறார் என்றும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் போது, மூன்று போலி சாரதி அனுமதி பத்திர அட்டைகள், ஆறு மொபைல் போன்கள், ஒரு கணினி போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர்கள் தற்போது மன்னம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மன்னம்பிட்டி பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்