போராட்டம் நடத்திய சீமான் கைது

சென்னை – அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் கடந்த 23ஆம் திகதியன்று மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழக எதிர்க்கட்சிகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி, திமுக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் துஷ்பிரயோகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வள்ளுவர் கோட்டம் பகுதியில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நுங்கம்பாக்கம் பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர்.

தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். அப்போது, “ஜனநாயக ரீதியில் போராட வந்த தன்னை பொலிஸ் துறை ஒடுக்குகிறது” என்று சீமான் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.